"உங்களுக்கு என்ன அண்ணே!!பிள்ளை பொண்ணுக்கு கல்யாணமெல்லாம் முடிஞ்சு போச்சு, வேறென்ன கவலை.'..
"ம்"என்று தலையை ஆட்டினேன்.
"பேரன் பாத்திட்டிங்க."
"அப்புறம்"
"அண்ணிக்கு மட்டும் கொஞ்சம் உடம்பு சரியில்லே அவ்வளவுதானே' என்றான் எதிரில் உட்கார்ந்டிருந்த கண்ணன்.
இருபது வருட சினிமா தொழன். உதவி இயக்குனராகவே இருபது வருடமாக இருப்பவன்.
"புரட்யூசர் கிடைச்சிட்டாருன்னே அடுத்தமாசம் படத்த ஆரம்பிச்சுடலாம்னே' என்று இவன் சொல்லி பல வருடங்கள்
காணாமல் போனது.
"அண்ணிக்கு சாதாரன ஆப்பரெஷன் கிடையாதுடா." என்றேன்."
தலையை ஆட்டிக்கொண்டே அடுத்த ரவுண்டை உள்ளே தள்ளியவன் அந்த பாரிலிருந்து புறப்பட தயாரானான்.
"அண்ணே! எம் பொண்டாட்டி அண்ணிமாதிரி இல்லே."
அடுத்த நிமிடம் காணாமல் போனான்.
இவ்வளவு நாள் கழித்து இங்கு வந்தது மனதுக்குஆறுதல் ஒரு பக்கம் இருந்தாலும் மனது படபடக்கத்தான் செய்த்து.
கல்யாணம் ஆன நாளிலிருந்தே எல்லாம் அவள் பார்த்து செய்ததுதான். மகனும், மகளும் வளர்ந்தது, படித்தது இதுவரை எனக்கு தெரியாத ஒன்று.
யாராவது என்னை
பொறுப்பற்ற மனுஷனாயிருக்கானே என்று என்னை விமர்சனம் செய்யும் போதெல்லாம் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மாறாக, "சினிமாக்காரன், எழுத்தாளன் இப்படித்தான், எங்க அப்பவ நான் பாககலையா?" என்று சொல்லி அடக்கி விடுவதை பார்த்திருக்கிறேன்.
அன்று ஆரம்பித்த கான்சரை அவளோடு துரத்தி இருபது ஆண்டுகள் முடிவடைந்தது.
பிறகென்ன?
இப்போது என்ன ஆயிற்று?
மொட்டை மாடியில் நடந்துவிட்டு கீழே வந்து கதவை திறப்பதற்குள் விழுந்து படுத்து மறுநாள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் வலதுபுற கால் மூட்டு உடைந்ததாக அறிவித்தார் டாக்டர்.
என் ஆசைகள், சினிமா கனவுகள், எழுத்து எல்லாம் சிறுக, சிறுக தேய்ந்து போயின.
ஒரு வகையில் முழுதாக இருந்தால்தானே தேய்ந்து போக..
தயாரிப்பாளர் என்ற வகையில் டப் செய்த படங்கள் நஷ்ட கணக்கில் இருபது லட்சம்.
என் வாழ்க்கையே அவளோடு அடங்கி போனது.
அடுத்தது இடதுபுற கால்.
என்ன ஆயிற்றா?
நடப்பதற்கென்றே பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஒரு பெண் நியமிக்க பட்டாள்.
அவள் செய்ததில் எங்கள் அதிர்ஷ்டம்
இருபது நாட்களே ஆனதில் இடது புற மூட்டு உடைந்து போனது.
அவளை குற்றம் சொல்ல எனக்கு மனதில்லை.
விதியை இங்கே நம்பித்தான்
ஆக வேண்டும். இதற்கு
பத்து நாட்களுக்கு முன்
மகன் அமெரிக்கா புறப்பட்டு போனான்.
'அப்பா! அம்மாவ பாத்துக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது." என்று அவன் சொன்னது ஞாபகம் வருகிறது.
இந்த நினைவுகளிலே வீட்டு வாசல் வரை வந்தாகிவிட்டது.
சுய நினைவுக்கு வந்தேன்.
அடித்த வாசனை
தெரியாதிருக்க வாயால் காற்றை இருமுறை ஊதிக்கொண்டேன்.
இதெல்லாம் மறப்பதில்லை.
சாவியை எடுத்து கதவை திறந்து தலயை நீட்டினேன்.
'எங்கே போனேள்? பசிக்கறது!!" என்றாள்.
"சும்மா பழைய ஃப்ரண்ட் கண்ணன் வந்துருந்தான்!!"
பொய் சொல்ல விரும்பாதவனாய் " ரொம்ப நாளாச்சு...பாருக்கு போய் ரெண்டு ரவுண்டு அடிச்சேன்."
"அது சரி. சொல்லிட்டு போறதுதானே...இல்லே ஃபொன் பண்ண வேண்டாமா..அந்த காலத்துலேயிருந்து இப்படித்தான்.திருந்தவே மாட்டேள்"
வாய் பேசாது கிச்சனுள் புகுந்து சாப்பாடை எடுத்து வந்து பரிமாறினேன்.
செல் ஃபொன் அலறியது.
"அவங்கிட்ட எதுவும் சொல்லாதே..."
அவள் முறைத்து பார்த்துவிட்டு அமெரிக்க
மகனுடன் பேச ஆரம்பித்தாள்.
ஏன் இப்படி சொன்னேன். மகனிடம் மரியாதையா அல்லது பயமா?
ஏன் இப்படி குழம்பி போகிறேன்?
லேசான துக்கம் வந்தாலும் அறுவை சிகிச்சை முடிந்து ஒருவாரமே ஆன அவளுக்கு படுக்கையிலேயே செய்ய வேண்டிய பனிவிடைகளை
செய்து முடிக்கும் போது இரவு
மணி ஒன்று.
என்னை அறியாது தூங்கிப் போனேன்.
காலை எழுந்து படிப்படியாக ஒரே வேலை மணைவிக்கு பணிவிடை செய்வதுதான்.
எத்தனை வருடங்கள் இது தொடரும்?
அவள் இறப்பினில்தான் எனக்கு விடுதலையோ?
வேண்டாம் இந்த கொடுமை...
நான் எங்கு போவேன்?
தனி மரமாகிப் போனால் ....
நினைக்கவே கொடுமை.....
யாரோடு இருப்பேன், பேசுவேன்?
நினைவுகள் தந்த அழுத்தங்களை எழுத்துக்களாக வடிக்க எனது தனிப்பட்ட கணணியோடு இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை.
இந்த புனைவு கதையா, கட்டுரையா? தனிப்பட்ட மனிதனின் நினைவு கூர்தலா?
எது வேன்டுமானாலும் இருக்கட்டும்...
மனதிலிருந்து இறக்கிய பாரம் என்னைவிட்டு தொலைந்தது.
நான் மீண்டும் அவளுடைய் அன்பு கணவனாகிப் போனேன்.
அதுபோதும்.
நாளை என்ன செய்வாய்?
இந்த கேள்விக்கே இடமில்லை.
என் கணணி என் எழுத்துக்களை பாரமாக நினைத்தால் இனி இதை யாருக்கு வேண்டுமானாலும் வலைப்பூவில் பகிரட்டும்.
மீண்டும்.....
ஸ்ரீநாத்..
மனதிலிருந்து இறக்கிய பாரம் என்னைவிட்டு தொலைந்தது----மகிழ்ச்சி..நண்பரே....
பதிலளிநீக்கு